Tuesday, June 27, 2023

பெயர் - ஒரு குறியீடுதான்

 பெயர் - ஒரு குறியீடுதான் =========================

சில நேரங்களில் மறதி நம்மையே மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தி விடும். இன்று என்னுடைய அப்பாவைப் பற்றி நான் முக நூலில் எழுதிக்கொண்டிருக்கும் அப்பாவைப் பற்றிய தொடரில், என் சின்னமா ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு எழுத வேண்டி இருந்தது. சுந்தரவள்ளி என்ற அவர் பெயரை சுந்தராம்பாள் என்று தவறாக எழுதி விட்டேன். என்னுடைய என் சொந்த சின்னம்மா. 1992 வாக்கில் இறந்து விட்டார். அவர் பெயரை நான் உச்சரித்தே ஆண்டுகள் பல ஆகி விட்டன. அவரை என் கிராமத்தில் சிலர் சுந்தராம்பாள் என்று அழைக்கக் கேள்விப்பட்டது உண்டு. கடைசியில் டூப்ளிகேட் பெயர் ஒரிஜினலை மீறி மனதில் முன்னால் வந்து விட்டது.

எனக்கு இரண்டு சின்னம்மாக்கள் - அம்மாவுடன் பிறந்தவர்கள். முதல்வர் மேற்சொன்ன சுந்தரவள்ளி; இரண்டாமவர் ருக்மிணி. சுந்தரவள்ளி சின்னம்மாவின் கணவர் ரத்தினம் சித்தப்பாதான் அப்பா தொடரில் அவருடைய ஆரம்பப் பள்ளித் தோழராக குறிப்பிடப்பட்டு இருப்பவர். சுந்தரவல்லி சின்னம்மாவை மறந்தது போல், ருக்மிணி சின்னம்மாவின் கணவரான சித்தப்பா பெயரையும் மறந்து போயிருந்தேன்... அவர் இறந்து 40 வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும் தெளிவில்லா நினைவிலிருந்து வேதையன் என்று நினைவு கூர்ந்தேன். எதற்கும் உறுதிப்படுத்தி விடுவோம் என்று என் மாமாவிற்கு போன் செய்து உறுதிப்படுத்திக் கொண்டிருதேன்.

30 - 40 ஆண்டுகளிலேயே தம் குடும்பத்தாராலேயே மறந்து விடக்கூடிய பெயரைக் காப்பாற்றதான் ஒவ்வொரு மனிதனும் சாம, தான பேத தண்ட முறைகள் அனைத்தையும் அனுசரித்து போராடி வருகிறோம். சூட்டப் படுகின்ற ஒரு சில பெயர்கள், அதே வேகத்திலேயே பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன, அல்லது மறக்கப் பட்டு விடுகின்றன. மகா கவியை எடுத்துக் கொள்ளுங்கள், அவருடைய சுப்பையா என்ற பெயர் மறைந்து சுப்பிரமணிய பாரதி, அதிலும் அந்த பாரதி (அது ஒரு சிறப்புப் பெயர்தான்) நிலைத்து விட்டது.

கிராமத்தில் ஒன்று பட்ட பெயர் வைப்பார்கள், அல்லது அவர்களுக்கு வசதியான பெயரில் கூப்பிடுவார்கள். என்னுடைய பெயரே ராஜேஸ்வரன் என்று 99 சதவீத பேருக்கு தெரியாது. வீட்டில் ராஜா என்று அழைப்பதால், என்னை ராஜா என்றே கிராமம் அறியும். இதில் இன்னொரு வேடிக்கை, எனக்கு பக்கத்து வீட்டில் இருந்த ஆறுமுகம் ** பெரியப்பா என்னை என் அண்ணன் பெயரான கோவிந்தராஜூ என்று சொல்லித்தான் அழைப்பார். அவர் ஒரு முறை கூட என்னை ராஜா என்றே அழைத்தது இல்லை; அப்புறம் எங்கே ராஜேஸ்வரன் என்று அழைப்பது? ** (குழம்ப வேண்டாம், அங்கு 2 வீட்டுக்கு ஒரு முறை ஆறுமுகம் என்ற பெயரைக் கேட்கலாம், நான் சின்னத்தச்சூர் கிராமத்தில் வேலை பார்த்த பொது, நெசவுத் தொழில் செய்யும் செங்குந்தர் கிராமங்களான சுற்றுவட்டாரத்தில் 2 வீட்டிற்கு ஒரு சுப்ரமணியன் இருப்பார் )
யாராவது கூறுங்கள் : இந்த ராஜேஸ்வரன் என்ற பெயர் அவ்வளவு கடினமானதா என்ன? நான் இந்தியன் வாங்கி சின்னத்தச்சூர் கிளையில் பணி புரிந்த போது, என்னுடன் கூட பணி புரிந்தவர் பெயர் ராஜ சேகர். எங்கள் இருவரையுமே ராஜ சேகர் என்றுதான் விழுப்புரம் நண்பர்கள் அழைப்பார்கள். நாங்களாகத்தான் யூகித்துக் கொள்ள வேண்டும் யாரை நினைத்துப் பேசுகிறார்கள் என்று. இவ்வாறு தவறாகக் கூப்பிடுபவர்களிலேயே ஒரு எலைட் குரூப் இருந்தது. சிறிது தெளிவாக தப்பு செய்யக் கூடியவர்கள். அவரை வெள்ளை ராஜ சேகர் என்றும், என்னை கருப்பு ராஜ சேகர் என்றும் அவர்கள் அடையாள படுத்திக் கொண்டார்கள் . இது சுமார் 8 வருட காலம்தொடர்ந்தது - ஒரு முறை ராஜசேகரிடம் சொன்னேன் " என் பெயரையும் ராஜ சேகர் என்றே எங்கள் வீட்டில் வைத்திருக்கலாம் யா.... என் பெயரே எனக்கு மறந்து விடும் போல் இருக்கிறது" என்று.

இதை விட இன்னொரு குழப்பம் எங்கள் வீட்டிலேயே நடக்கும். என் அண்ணன் மகள் பெயர் ராஜேஸ்வரி, அண்ணன் மகன் பெயர் ராஜேஸ்வரன். அவன் கொஞ்சம் அதிஷ்டசாலி. ஒன்றுக்கு பாதியாவது ராஜேஸ்வரன் என்று கூப்பிடுவார்கள்.
நான் கல்லூரியில் படிக்கும் போது என் பள்ளிக்காலத் தோழர் சதீஷ் குமார் என்பவர் என்னைத்தேடி வந்தார். அது திருவாரூர், வீடு அண்ணன் வீடு, இருந்த தெரு ஒரு சிறு சந்து. அந்த சந்தில் அனைவரையும், அனைவருக்கும் தெரியும். தேடி வந்த சதீஷ் நேராக எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு சென்று இங்கு ராஜேஸ்வரன் வீடு எது என்று கேட்டிருக்கிறார். சரியாகக் காட்டி விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு சந்தேகம். இந்த கல்லூரி மாணவனுக்கு ராஜேஸ்வரனிடம் என்ன வேலை? அவரிடமே கேட்டிருக்கிறார்கள் - உங்களுக்கு ராஜேஸ்வரனை எப்படித் தெரியும் ?. அவர் சுருக்கமாக நானும் அவனும் க்ளாஸ்மேட் என்று சொல்லிவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார்.
சிறிது நேரத்திலேயே ராஜிக்கு (என் அண்ணன் மகள் - ராஜேஸ்வரி ) ஒரு சம்மன் வந்து விட்டது. "ஏண்டி, ஒரு காலேஜ் படிக்கிற பையன் உன்னோட தம்பிய தேடி கிளாஸ்ட் மேட்னு சொல்லிட்டு வந்தாரு ...?!" "இல்லப்பா, ராஜேஸ்வரன்னு அவர் சொன்னது என் தம்பிய இல்லை, என் சித்தப்பாவை "... அநேகமாக அந்தப் பக்கத்து வீட்டுக்கு என் முழுப்பெயர் அன்றுதான் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது வரை நான் அங்கும் ராஜாதான்.

பெயர் என்பதே ஒரு வித குறியீடுதான். குறியீடுக்கே குறியீடு வைக்கும் போது இன்னும் சுவாரஸ்யம் ஆகிறது. என்னுடன் கல்லூரியில் படித்த என் தோழி ஒருவரை கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவே நான் கேப்டன் என்றுதான் அழைக்கிறேன். அது அவருடைய தலைமைப் பண்பிற்கு நண்பர்கள் இட்ட குறியீடாகத்தான் பார்க்கிறேன். மேலும் அவர் தந்தையும் ராணுவத்தில் கேப்டனாக இருந்து பின் எங்கள் கல்லூரியிலும் பேராசிரியராக பணியாற்றினார் . 2 இன் 1 ஆக அந்தப் பெயர் அவருக்கு விளங்கி விட்டது.

இதே மாதிரி மறு குறியீடு நண்பர்களின் சங்கேத மொழிப பரிமாறல்களில் உண்டு. கல்லூரி காலத்தில் என் நண்பர்கள் மத்தியில் ஒரு பெண்ணைப் பற்றி நான் அடிக்கடி பேசுவதுண்டு. மிக நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் அவள் யாரென்று தெரியாது... எதோ தூர தேசத்தில் இருப்பது போல் நினைத்துக் கொள்வார்கள் . ஆனால் அந்த மறுகுறியீட்டில் சுட்டப் பட்ட அந்த பெண் அதே ஊரில்தான் இருந்தாள்.

அவள் பெயர் பூங்கொடி.

(இதைப் புரிந்து என் இல்லாள், குறுக்கிலேயே மிதிக்காத வரை ...... குறியீடுகளும், மறு குறியீடுகளும் இனியவையே)
27/06/2023

Wednesday, October 26, 2022

துரைப்பாக்கம் கொடுக்கு வீரன்

 

துரைப்பாக்கம் கொடுக்கு வீரன்

*****************************************

சுஹா உணவு தேடி வெளியில் வந்தான். பிரசவத்திற்கு முன்னால் திரும்பி வர வேண்டும், போதுமான இரத்தம் உறிஞ்சி வந்தால், தனக்கும் சுவிக்கும் ஆகும் என்று நினைத்தான். அண்ணாந்து பார்த்தான். மலையை விட உயர்ந்து கண்ணுக்கெட்ட தூரம் பரவி கிடக்கிறது அந்த மனிதர்கள் வாழும் பெரும் குகைகள். அதில் உள்ள திறப்புகள் ராட்சச அளவில் எளிதில் அவனை உள் வாங்கிக் கொள்ளும் வகையில் இருக்கின்றன.

அந்த மனிதன் தன் பெருங்கையால் அடித்து அழித்திருந்தான். சுஹா கலங்கி நின்றான். இது நம் வாழ்வின் சாபக் கேடு. உணவின் மூலமே எமன் ஆவது. கலங்குவதால் மட்டும் அவர்கள் உயிரோடு திரும்பவதற்கில்லை. மற்றவர்களை காப்பாற்றி ஆக வேண்டும். தப்பித்து வந்தவர்களோடு இருக்கைகள் பின் புறம் ஒளிந்து கொண்டனர் மிஞ்சியவர்கள்.

அந்த மனிதன் பதாகை கொண்டு வீசினான்; ரதத்தின் கதவுகளை திறந்து வைத்து வெளிக்காற்று வீச வைத்து எரிச்சசலூட்டினான். எவரும் இருந்த இடம் விட்டு அசையவில்லை. விட்டு நகர்ந்தவர்களும்; மீண்டும் இருக்கைகளுக்கு பின் மறைந்து கொண்டார்கள். சில நிமிடம் கழித்துதான் வாழ்க்கையை புரட்டிப் போடும் அந்த நிகழ்வு நடந்தது.

அந்த மனிதன் ரதத்தின் அத்தனை கதவுகளையும் முழுக்க மூடினான். வெளியில் செல்ல இயலாத அளவுக்கு பாதுகாப்பாக அடைக்கப் பட்டது ரதம். போதுமான பிராண வாயு கிடைத்ததே தவிர வெளியில் செல்லும் சுதந்திரம் சுத்தமாக பறிபோனது. அவன் மீண்டும் வரும்போது அத்தனை பேரும் தப்பித்து விட வேண்டும் என்று பேசி முடிவானது. வெளியில் உணவு தேடிக்கொள்ளலாம்; ரதம் வசதிப்பட்டதாக தெரியவில்லை.

ஒரு வழியாக காத்திருப்பு முடிவுக்கு வந்தது; கதவு திறக்கப் பட்டது. இப்போது தலையை உள் நீட்டிய கரிய மனிதன் ஏதோ ஒரு பிரமாண்டமான நீர்க்குடுவையை ரதத்தின் ஒரு பகுதியில், அவனுக்கு அருகில் பொருத்தி அந்த ராட்சச விசையை தட்டி விட்டான்; இனம்புரியாத மனம் ஒன்று பரவத் தொடங்கியது . இந்த மணத்தோடு இங்கேயே சிறிது நேரம் இருப்பதா அல்லது அடுத்த கதவு திறந்தால் வெளியேறுவதா என்று சர்ச்சை நடக்கும்போதே அடுத்த கதவு திறந்தது.

வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லாமல் இன்னும் நான்கு மனிதர்கள் உள்ளே வந்து ரதத்தை நிரப்ப, வெளியேறும் சந்தர்ப்பம் கிடைக்காமலே ரதம் அந்த கரிய மனிதனால் கிளப்பப் பட அசுர வேகத்தில் ஓட ஆரம்பித்தது.

அந்த இடத்தை கோடம்பாக்கம் என்று மனிதர்கள் அழைத்துக் கொண்டார்கள். சுஹா மனித மொழி அறிந்தவன்; குடிஸ் தாத்த கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் அடிக்கடி சொல்லுவார்; மனிதர்களின் மொழி நாம் அறிந்து வைத்திருத்தல் நம் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றும். என்று.

இந்த முறை ரதத்தின் மேல் பகுதியில் பிளவு ஒன்று கொடுக்கப் பட்டு அதன் சாளரங்கள் மூடப் பட்டிருந்தன. சுஹா மற்றும் அவன் சகாக்களின் உருவ அமைப்புக்கு அந்த பிளவு மிக மிகப் பெரியது; எளிதில் வெளிச் செல்ல முடியும். அனைவரும் கூடி ஆலோசித்து குழு குழுவாக வெளியில் செல்ல முடிவாயிற்று.

முதல் குழுவில் சுஹா வெளியேறினான். வெளி நிலைமை ஏறக்குறைய அவனது சொந்த இடமான துப்பா போலத்தான் இருந்தது (அதனை மனிதர்கள் துரைப்பாக்கம் என்று அழைத்தார்கள்). இங்கும் பெரிய பெரிய மனிதர்கள் வாழும் மழைக் குகைகள் இருந்தன. சில இடங்களில், அவன் இன மக்களின் குடியிருப்புகள் இருந்தன. குடியிருப்பு நெருக்கம் அதிகம். துப்பா அளவிற்கு இங்கு அடிக்கும் காற்று வேகமாகவோ எரிச்சலூட்டும் வகையிலோ இல்லை. மீண்டும் ரதத்தின் உள்ளே சென்று மற்ற சகாக்களிடம், வெளியேறுவதில் எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அவர்களை வெளியேற்றி வந்தான் சுஹா.

சுவி தன்னை மறந்திருப்பாளோ என்ற விசனம் தொற்றிக் கொண்டது. அங்கு இருந்த பிலாட் பயலுக்கு எப்போதும் அவள் மீது ஒரு கண். இந்நேரம் அவனுடையவளாய் ஆகியிருப்பாளோ ?! மன சஞ்சலம் அதிகமானது; லேசாய் பசிக்கவும் ஆரம்பித்தது. இரவுப் பொழுது தொடங்கியிருந்தது. இனி உணவு தேட வேண்டியதுதான்.

வெளியில் வந்து அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்தான். சுவி நினைவு துரத்தியது. பிலாட் முகம் வந்து கடுப்பேற்றியது. அதே நேரம் சுவி மீதான நம்பிக்கை உத்வேகம் தந்தது. வேகமாக அலைய ஆரம்பித்தான். சீக்கிரம் உணவு உண்டு, மற்ற நண்பர்களை ரதத்துக்கே வரச் சொல்லியிருந்தான். மீண்டும் ரதம் கிளம்பி துப்பா செல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. துப்பா இவன் இன சக்திக்கும் வேகத்தும் கடந்து செல்லும் தூரமல்ல. இன்று பறக்க ஆரம்பித்தால் தொடர்ந்து பறந்தாலும் பாதி ஆயுள் முடிந்து கிழவனாகும்போது மட்டுமே அங்கு செல்ல இயலும்.

விரைவில் கிடைத்த இரண்டு சொட்டு மனித இரத்தம் உறிஞ்சி - ருசியெல்லாம் பார்க்கும் மன நிலையில் அவன் இல்லை. அவசரம் அவசரமாக ரதம் திரும்பினான். பெரும்பாலான சகாக்கள் திரும்பியிருந்தனர். புது இடம்; ஒருவருக்கொருவர் மட்டுமே ஆறுதல்.

சுஹா சப்தமாக பேசினான். " நண்பர்களே, நாம் மிகத் தொலைவு வந்து விட்டோம்; காலம் பல கடந்து விட்டது என் பிள்ளைகள் இந்நேரம் விளையாடவே துவங்கியிருப்பார்கள். நாம் இந்த தேசத்தில் எவ்வளவு நாள் இருப்போம் என்பது தெரியாது. ஆனால் துப்பா திரும்புவதற்கு இந்த ரதம் மட்டுமே வழி. நம் தேசம் திரும்பும் வரை வெளியில் சென்றால் துரிதமாக இந்த ரதம் திரும்பி விட வேண்டும். இல்லை இந்த தேசத்திலேயே தங்கும் உத்தேசம் வேண்டும். ஒவ்வொருவரும் முடிவு செய்யுங்கள் - ஒரு வேளை ரதம் சென்றாலும் பரவாயில்லை என்றால் அதற்கேற்றாற்போல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். "

ரதம் நீண்ட நேரம் ஓடி மீண்டும் ஒருஇடத்தில் இருளான இடத்தில் நிலை கொண்டது. வெளியில் வந்து அந்த தேசத்து இளைஞன் ஒருவனிடம் விசார்த்ததில், தேசத்தின் பெயர் ரப்பே என்றும் மனிதர்கள் அதை ராயபேட்டை என்று அழைப்பதாகவும் தெரிய வந்தது. சுஹா முடிவு செய்துவிட்டான்; ரதத்தை விட்டு எங்கும் போவதில்லை; அந்த கரிய மனிதநிடமோ, கூட பயணிக்கும் முகத்தில் பதாகை அணிந்த அந்த மனிதநிடமோ மட்டுமே ரத்தம் உறிஞ்ச வேண்டும். வெளியில் சென்றால் ரதம் கிளம்பி விடும்.

ஆனால் கூட வந்த அத்தனை பேரும் வெளியில் சென்று உணவு உட்கொண்டு வந்தார்கள்; அங்கு இருள் சூழ்ந்ததால், இடம் பிடித்திருப்பதாகவும், அந்த மனித நாளின் இறுதியில் துப்பா செல்வதற்கான வாய்ப்பு இல்லை என்றால் அங்கேயே தங்கிவிட முடிவு எடுத்திருந்தனர்.

சுஹா, சுவி நினைவில் இருந்தான். வேறு ஒருத்தியை தொடுவது கூட அருவருப்பான நினைவாக இருந்தது. இங்கு பெண்கள் அழகுதான்; உருவத்திலும் வாட்ட சட்டமாக இருந்தார்கள். மற்ற சகாக்கள், தங்கள் துணைகளை தேர்ந்தெடுக்க துவங்கி விட்டார்கள். சுஹா வுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. சுஹா பிடிகொடுக்கவில்லை.

காலம் ஓடியது, கரிய மனிதனை காண வந்த மனிதர்கள் ரதத்தின் உள்ளே உட்கார்ந்து உரையாடினார்கள்; லாவகமாய் தனக்கான உணவை சேகரித்துக் கொண்டான் சுஹா. அன்றைய தினம் மாலை நெருங்கி விட்டது. சஹாக்கள் அத்தனை பேரும் இங்கேயே புதுத் துணைகளோடு தங்கி விட்டனர். இங்கு பிள்ளை குட்டிகள் என்று ஆக தொடங்கியிருந்தது.

பதாகை அணிந்த மனிதன் உள்ளே வந்தான், கரிய மனிதன் ரதத்தை கிளப்பினான்; சுஹா கடவுளை வேண்ட ஆரம்பித்தான். "கடவுளே, வந்த நண்பர்களில் பலர் கோப்பா விலும் , சிலர் ரப்பே விலும் பிரிந்து விட்டார்கள்; இப்போது நான் அனாதை. நான் சுவியை பார்த்தே ஆகா வேண்டும். அவள் எனக்காக காத்திருப்பாள். நான் சென்றே ஆக வேண்டும். என் பிள்ளைகள் இப்போது பிள்ளை பிராயம் தாண்டி இருப்பார்கள். குடிஸ் தாத்தா இந்நேரம் காலமாகி இருக்க கூடும்; நான் சென்றே ஆக வேண்டும் சுவியை பார்க்க" வேண்டுதல் நீண்டு கொண்டே போக ரதம் மீண்டும் கோப்பா வை அடைந்திருந்தது.

கோப்பா விலிருந்து ரப்பே ரப்பே விலிருந்து கோப்பா என்று மனித நாட்களில் மேலும் நான்கு நாட்கள் முடிந்து போயிருந்தன. சுஹா நடை பிணமாய் ஆகியிருந்தான். வாழ்வின் மத்தியில் இருக்கிறான். இன்னும் ஒரே நாளில் வயோதிகம் அவனைத் தீண்ட ஆரம்பிக்கும். இப்போதே தளர ஆரம்பித்திருந்தான்; தனிமை அவனைக் கொன்றது . ஏறக்குறைய மன நோயாளி போல் மாறியிருந்தான். மனித ரத்தம் உறிஞ்சும் பொது கூட பதறாமல் உறிஞ்சினான். அடித்தும் அழித்தால் அழித்து விட்டு போகட்டும் என்று நினைத்தான். மரணமும் வரவில்லை. சுவி நினைவு மட்டுமே இருந்தது.

கடந்தன இன்னும் மூன்று மனித தினங்கள்; உடல் சோர்வு ; மன சோர்வு வயோதிகம் எல்லாம் அவனை அந்த ரதத்துக்குள் மட்டுமே முடக்கி வைத்திருந்தன. உணவு உண்ணும் எண்ணம் இல்லாமல் இருக்கையின் பின் மயங்கிய நிலையில் இருந்தான். வெளியில் கரிய மனிதன் பேசிக்கொண்டிருந்தான், ரதத்தை நீராட்டி அலசுதல் பற்றி.

சுஹா தீர்மானமாக இருந்தான். ரதத்தில் உயிருடன் மிஞ்சினால் சுவியை சேர்வது இல்லையென்றால் சுவர்க்கம் சேர்வது. மிக நீண்ட காலத்துக்கு பிறகு வேறு ஏதோ தேசத்திற்கு சென்றது ரதம். கதவுகள் அத்தனையும் திறக்கப் பட்டன. இவன் இன மக்கள் யாருமே ரதத்தின் உள்ளே அப்போது இல்லை. சுஹா மட்டுமே.

சுற்றிலும் மிகப் பெரிய அருவி வீழ்வது போல் சப்தம் கேட்டது. கண்ணை மூடிக் கொண்டான் சுஹா. வாய் முனகிக் கொண்டே இருக்கிறது. " சுவி.. சுவி. சுவி "; முகம் தெரியாத பிள்ளைகள் ஞாபகம் வருகிறார்கள் -- இந்நேரம் வாலிபத்தில் இருப்பார்கள்; துணை சேர்ந்திருப்பார்கள். துப்பாவில் இருக்கிறார்களோ அல்லது என்னை மாதிரி மூளை இன்றி ரதத்தில் ஏறி வேறு தேசம் சென்றார்களோ....

எங்கும் அருவி ஒலி, ரதம் முழுக்க அதிர்வு...இருக்கையில் பெரும் நீர்த்திரள். மெல்ல ரதத்தை விட்டு வெளியில் வந்தான். ரதம் சுத்திகரிக்கப் பட்டு கொண்டிருந்தது. மீண்டும் ரதம் புறப்படுவதற்கு முன் உள்ளே சென்று இருக்கையின் பின் அமர்ந்து கொண்டான்.

ஏதோ செய்தி வந்தது கரிய மனிதனுக்கு; ரதம் வேகமாக நகர துவங்கியது....அரை மயக்கத்தில் கண்ணை மூடிக்கொண்டான். விழித்தபோது பசிக்கு கரியவனின் கழுத்தில் சிறிது ரத்தம் உறிஞ்சிக் கொண்டான். ரதம் நிலைக்கு வந்தது. கரியவன் வெளியே செல்ல, சுஹா கிடைத்த இடைவெளியில் மீண்டும் வெளியில் வந்தான்.

கண் மங்கலாகி இருந்தது; இன்னும் சிறிது காலத்தில் மரணம் எட்டி விடும். இது எந்த தேசமோ? பார்த்தது போல் இருந்தது. அண்ணாந்து பார்த்தான். அதே அதே மனித மலைக்குகைகள்.... யேதோ ஒரு புது உணர்வு. அங்கு வந்த அவன் இனத்தவனிடம் கேட்டான். இந்த எந்த தேசமே? அந்த இளைஞன் சொன்னான் " இது துபே".

அப்போது இது துப்பா இல்லையா? சோர்ந்துபோய் ரதத்தின் கூரையில் அமர்ந்தான். அவன் வயதொத்த ஒருவன் அவனை நெருங்கி வந்தான். மெல்ல கேட்டான் " நீ ..நீ... சுஹாதானே?!". சுஹா ஆச்சர்யத்தில் உற்று நோக்கினான். ஆம் அவன் பிலாட் தான்.

பல காலமாக மறைந்திருந்த வெறுப்பு மெல்ல தலை காட்டியது; மறைத்துக் கொண்டு கேட்டான் " இது வேறு தேசமாயிற்றே, துப்பா விலிருந்து எப்போது இங்கே வந்தாய்?"

பிலாட் சொன்னான் " இல்லை, இஅல்லை, இது துப்பாதான், பெயரை சிறிது மாற்றியிருக்கிறார்கள்".

சுஹா தயங்கியவாறு கேட்டான் " குடிஸ் தாத்தா இருக்கிறாரா? சுவி இருக்கிறாளா? எப்படி இருக்கிறாள்?"

பிலாட் சொன்னான் " குடிஸ் தாத்தா இறந்து ஆண்டு பலவாகி விட்டது ; சுவி என்னோடுதான் இருக்கிறாள் ... வா....."

சுஹா நடை பிணமாகி விட்டான்... இவனோடுதானா? வழியில் ஏதேதோ பேசினான் பிலாட் ஏதும் ஏறவில்லை; வீட்டில் நுழைந்தான்.

சுவி - அவன் செல்லும்போது தள தள என்று இருந்த சுவி இளைத்து உரு மாறி இருந்தாள். நடையில் தள்ளாட்டம் இருந்தது; இவனை கண் கொண்டு பார்க்காமல் குனிந்தபடி இருந்தால். கண்ணீர் விட்டது நன்றாக தெரிந்தது"

பிலாட் சொன்னான் - " நீ சென்றபிறகு வந்த தலைமுறைக்கு மனித ரதத்தில் ஏறக் கூடாது என்று சொல்லி பழக்கியிருக்கிறோம் ; இப்போது கூட ஒரு பிரசார விழா இருக்கிறது. நான் செல்கிறேன். நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். பிள்ளைகள் கூட்டத்தில் எனக்காக காத்துக் கொண்டிருப்பார்கள்" சொல்லி விட்டு வெளியேறினான்.

சுஹா , சுவியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான்.

"ஏதாவது பேசு சுவி....."

அழைத்த் தொடங்கினாள் சுவி... " என்ன பேசுவது? நீ இருக்கிறாயா இல்லையா என்று தெரியாமல் தினம் தினம் செத்தேன். குடிஸ் கிழவன் இறந்த பின்பு, அனாதையாக இருந்தேன். பிள்ளைகளோடு; தனிமரமாக. பிலாட் இருந்ததால் பிழைத்தேன்".

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னாள் "சரி ஓய்வேடு... இதோ நம் பிள்ளைகள் வந்துவிடுவார்கள்; பிளாட் அண்ணனும் வந்து விடுவார். நம் பிள்ளைகள்தான் அவருக்கும் பிள்ளைகள் - என்னை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் தனக்கு இணை கூட தேடவில்லை ; மாமாவுக்கு மருமகன்களே பிள்ளைகள்"

சொன்னபடி அவன் கைபிடித்தாள் கதறி அழத் தொடங்கினான் - சுஹா....

Aug 27, 2015 12:36:52am