Tuesday, June 27, 2023

பெயர் - ஒரு குறியீடுதான்

 பெயர் - ஒரு குறியீடுதான் =========================

சில நேரங்களில் மறதி நம்மையே மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தி விடும். இன்று என்னுடைய அப்பாவைப் பற்றி நான் முக நூலில் எழுதிக்கொண்டிருக்கும் அப்பாவைப் பற்றிய தொடரில், என் சின்னமா ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு எழுத வேண்டி இருந்தது. சுந்தரவள்ளி என்ற அவர் பெயரை சுந்தராம்பாள் என்று தவறாக எழுதி விட்டேன். என்னுடைய என் சொந்த சின்னம்மா. 1992 வாக்கில் இறந்து விட்டார். அவர் பெயரை நான் உச்சரித்தே ஆண்டுகள் பல ஆகி விட்டன. அவரை என் கிராமத்தில் சிலர் சுந்தராம்பாள் என்று அழைக்கக் கேள்விப்பட்டது உண்டு. கடைசியில் டூப்ளிகேட் பெயர் ஒரிஜினலை மீறி மனதில் முன்னால் வந்து விட்டது.

எனக்கு இரண்டு சின்னம்மாக்கள் - அம்மாவுடன் பிறந்தவர்கள். முதல்வர் மேற்சொன்ன சுந்தரவள்ளி; இரண்டாமவர் ருக்மிணி. சுந்தரவள்ளி சின்னம்மாவின் கணவர் ரத்தினம் சித்தப்பாதான் அப்பா தொடரில் அவருடைய ஆரம்பப் பள்ளித் தோழராக குறிப்பிடப்பட்டு இருப்பவர். சுந்தரவல்லி சின்னம்மாவை மறந்தது போல், ருக்மிணி சின்னம்மாவின் கணவரான சித்தப்பா பெயரையும் மறந்து போயிருந்தேன்... அவர் இறந்து 40 வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும் தெளிவில்லா நினைவிலிருந்து வேதையன் என்று நினைவு கூர்ந்தேன். எதற்கும் உறுதிப்படுத்தி விடுவோம் என்று என் மாமாவிற்கு போன் செய்து உறுதிப்படுத்திக் கொண்டிருதேன்.

30 - 40 ஆண்டுகளிலேயே தம் குடும்பத்தாராலேயே மறந்து விடக்கூடிய பெயரைக் காப்பாற்றதான் ஒவ்வொரு மனிதனும் சாம, தான பேத தண்ட முறைகள் அனைத்தையும் அனுசரித்து போராடி வருகிறோம். சூட்டப் படுகின்ற ஒரு சில பெயர்கள், அதே வேகத்திலேயே பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன, அல்லது மறக்கப் பட்டு விடுகின்றன. மகா கவியை எடுத்துக் கொள்ளுங்கள், அவருடைய சுப்பையா என்ற பெயர் மறைந்து சுப்பிரமணிய பாரதி, அதிலும் அந்த பாரதி (அது ஒரு சிறப்புப் பெயர்தான்) நிலைத்து விட்டது.

கிராமத்தில் ஒன்று பட்ட பெயர் வைப்பார்கள், அல்லது அவர்களுக்கு வசதியான பெயரில் கூப்பிடுவார்கள். என்னுடைய பெயரே ராஜேஸ்வரன் என்று 99 சதவீத பேருக்கு தெரியாது. வீட்டில் ராஜா என்று அழைப்பதால், என்னை ராஜா என்றே கிராமம் அறியும். இதில் இன்னொரு வேடிக்கை, எனக்கு பக்கத்து வீட்டில் இருந்த ஆறுமுகம் ** பெரியப்பா என்னை என் அண்ணன் பெயரான கோவிந்தராஜூ என்று சொல்லித்தான் அழைப்பார். அவர் ஒரு முறை கூட என்னை ராஜா என்றே அழைத்தது இல்லை; அப்புறம் எங்கே ராஜேஸ்வரன் என்று அழைப்பது? ** (குழம்ப வேண்டாம், அங்கு 2 வீட்டுக்கு ஒரு முறை ஆறுமுகம் என்ற பெயரைக் கேட்கலாம், நான் சின்னத்தச்சூர் கிராமத்தில் வேலை பார்த்த பொது, நெசவுத் தொழில் செய்யும் செங்குந்தர் கிராமங்களான சுற்றுவட்டாரத்தில் 2 வீட்டிற்கு ஒரு சுப்ரமணியன் இருப்பார் )
யாராவது கூறுங்கள் : இந்த ராஜேஸ்வரன் என்ற பெயர் அவ்வளவு கடினமானதா என்ன? நான் இந்தியன் வாங்கி சின்னத்தச்சூர் கிளையில் பணி புரிந்த போது, என்னுடன் கூட பணி புரிந்தவர் பெயர் ராஜ சேகர். எங்கள் இருவரையுமே ராஜ சேகர் என்றுதான் விழுப்புரம் நண்பர்கள் அழைப்பார்கள். நாங்களாகத்தான் யூகித்துக் கொள்ள வேண்டும் யாரை நினைத்துப் பேசுகிறார்கள் என்று. இவ்வாறு தவறாகக் கூப்பிடுபவர்களிலேயே ஒரு எலைட் குரூப் இருந்தது. சிறிது தெளிவாக தப்பு செய்யக் கூடியவர்கள். அவரை வெள்ளை ராஜ சேகர் என்றும், என்னை கருப்பு ராஜ சேகர் என்றும் அவர்கள் அடையாள படுத்திக் கொண்டார்கள் . இது சுமார் 8 வருட காலம்தொடர்ந்தது - ஒரு முறை ராஜசேகரிடம் சொன்னேன் " என் பெயரையும் ராஜ சேகர் என்றே எங்கள் வீட்டில் வைத்திருக்கலாம் யா.... என் பெயரே எனக்கு மறந்து விடும் போல் இருக்கிறது" என்று.

இதை விட இன்னொரு குழப்பம் எங்கள் வீட்டிலேயே நடக்கும். என் அண்ணன் மகள் பெயர் ராஜேஸ்வரி, அண்ணன் மகன் பெயர் ராஜேஸ்வரன். அவன் கொஞ்சம் அதிஷ்டசாலி. ஒன்றுக்கு பாதியாவது ராஜேஸ்வரன் என்று கூப்பிடுவார்கள்.
நான் கல்லூரியில் படிக்கும் போது என் பள்ளிக்காலத் தோழர் சதீஷ் குமார் என்பவர் என்னைத்தேடி வந்தார். அது திருவாரூர், வீடு அண்ணன் வீடு, இருந்த தெரு ஒரு சிறு சந்து. அந்த சந்தில் அனைவரையும், அனைவருக்கும் தெரியும். தேடி வந்த சதீஷ் நேராக எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு சென்று இங்கு ராஜேஸ்வரன் வீடு எது என்று கேட்டிருக்கிறார். சரியாகக் காட்டி விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு சந்தேகம். இந்த கல்லூரி மாணவனுக்கு ராஜேஸ்வரனிடம் என்ன வேலை? அவரிடமே கேட்டிருக்கிறார்கள் - உங்களுக்கு ராஜேஸ்வரனை எப்படித் தெரியும் ?. அவர் சுருக்கமாக நானும் அவனும் க்ளாஸ்மேட் என்று சொல்லிவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார்.
சிறிது நேரத்திலேயே ராஜிக்கு (என் அண்ணன் மகள் - ராஜேஸ்வரி ) ஒரு சம்மன் வந்து விட்டது. "ஏண்டி, ஒரு காலேஜ் படிக்கிற பையன் உன்னோட தம்பிய தேடி கிளாஸ்ட் மேட்னு சொல்லிட்டு வந்தாரு ...?!" "இல்லப்பா, ராஜேஸ்வரன்னு அவர் சொன்னது என் தம்பிய இல்லை, என் சித்தப்பாவை "... அநேகமாக அந்தப் பக்கத்து வீட்டுக்கு என் முழுப்பெயர் அன்றுதான் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது வரை நான் அங்கும் ராஜாதான்.

பெயர் என்பதே ஒரு வித குறியீடுதான். குறியீடுக்கே குறியீடு வைக்கும் போது இன்னும் சுவாரஸ்யம் ஆகிறது. என்னுடன் கல்லூரியில் படித்த என் தோழி ஒருவரை கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவே நான் கேப்டன் என்றுதான் அழைக்கிறேன். அது அவருடைய தலைமைப் பண்பிற்கு நண்பர்கள் இட்ட குறியீடாகத்தான் பார்க்கிறேன். மேலும் அவர் தந்தையும் ராணுவத்தில் கேப்டனாக இருந்து பின் எங்கள் கல்லூரியிலும் பேராசிரியராக பணியாற்றினார் . 2 இன் 1 ஆக அந்தப் பெயர் அவருக்கு விளங்கி விட்டது.

இதே மாதிரி மறு குறியீடு நண்பர்களின் சங்கேத மொழிப பரிமாறல்களில் உண்டு. கல்லூரி காலத்தில் என் நண்பர்கள் மத்தியில் ஒரு பெண்ணைப் பற்றி நான் அடிக்கடி பேசுவதுண்டு. மிக நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் அவள் யாரென்று தெரியாது... எதோ தூர தேசத்தில் இருப்பது போல் நினைத்துக் கொள்வார்கள் . ஆனால் அந்த மறுகுறியீட்டில் சுட்டப் பட்ட அந்த பெண் அதே ஊரில்தான் இருந்தாள்.

அவள் பெயர் பூங்கொடி.

(இதைப் புரிந்து என் இல்லாள், குறுக்கிலேயே மிதிக்காத வரை ...... குறியீடுகளும், மறு குறியீடுகளும் இனியவையே)
27/06/2023