Thursday, November 17, 2011

உலகச் சுருக்கி

என் மடியில் நீ
படுத்திருக்கும்போதேல்லாம்
என்னென்னவோ
சிந்திந்துள்ளேன்...!

எதை எதையோ கிறுக்கியுள்ளேன்
எண்ணங்களை வாகனமாக்கி
எங்கெல்லாமோ சுற்றி
வந்திருக்கிறேன்....
இரண்டு நாள் பயண
தூரத்தில்
இருப்பவர்களைஎல்லாம்
இமைப்பொழுதில்
எட்டித் தொட்டிருக்கிறேன்...!

ஒளிக்கில்லா வேகம்
உன்னால்தான்
என் எழுத்துக்கு கிடைத்தது...
உலக இலக்கியத்திலிருந்து
உள்ளூர் அரசியல் வரை
என் படுக்கையறைக்கு
இழுத்து வந்தவன் நீ..!

உன்னை வைத்தே
எத்தனையோ விஷயங்கள் மீது
எழுதிச் சலித்த எனக்கு
இன்றுதான் தோன்றியது..
உனக்கொரு செல்லப்பெயர்
வைத்தால் என்ன என்று...

இதோ சூடிக்கொள்
என் மடிக் கணினியே....
இன்று முதல் நீ
"உலகச் சுருக்கி"...!

Sunday, November 13, 2011

அம்மா - ஓர் உயிர்க்கவிதை

கரம் தந்தவள் அம்மா... - அதற்கு
காரம் தந்து வளர்த்தவள் அம்மா...
தழிலே குறு நகை ஏந்தி...- அன்பு
ந்துனைக் காத்த ஏந்திழை அம்மா...

யிர்தனைத் தாயவள் தந்தாள் - ஊக்கம்
ட்டியே உலகத்தில் நடையிடச் செய்தாள்
ழில் தரும் ஆடைகள் சூட்டி - உன்னை
னையோர் புகழ ஏதுவாய்ச் சமைத்தாள்..

ம்பதைக் கடந்திடும் பிள்ளை - தாயோ
ன்பது வயதினள் போல் பணி செய்வாள்
டுதல் ஆடுதல் குறைந்து - உடல்
வையாய் கூனினும் அன்பிலே உயர்வாள்!

ஒரு ஞாயிறின் தனிமையில்...

ஒரு ஞாயிறின் தனிமையில்...

ஞாயிற்றுக் கிழமைகள்
ஓய்வோடு சேர்த்து
சிந்திக்க நேரமும் தருகின்றன..

சிந்தனைக்கும் நிகழ்காலத்திற்கும்
நெடுங்காதம்....
சேர்வதே இல்லை....
சிந்தனைச் சிறகு
ஒன்று பழங்காலத்தை
தூசி தட்டி பாய் போல் விரிக்கிறது...
அல்லது கனவும் கற்பனையுமாய்
விரியும் எதிர்காலத்தை
குடையாய் பிடிக்கிறது...

இந்த ஞாயிறு எனக்களித்த
சிந்தனை....
இறந்த காலத்தின் வாழும் நினைவுகள்..
இப்படியோர் மாலை
இளவயதில் இருந்தால்
தனிமை உணர்வு
நெருங்கி வராது....
இள வெயிலும், இதமான காற்றும்
விளையாட சேர்ந்த
பொடியர்களின் கூட்டமும்...
இழந்து நிற்கும் இந்த கணம்..
தனிமை கூட்டுகிறது...
பொடியனாகவே இருந்திருக்கலாம்
என்ற ஏக்கம் வாட்டுகிறது...

கிராமத்தின் மணலும்..
கீற்றுக் கொட்டகைகளும்...
சாலைகள் இல்லா ஊரில்
சாலையாய் வளையும் கால்வாயும்...
அறுவடை முடிந்த பின்பு
கால் குத்தும் நெல் சட்டையும்
நெல்லடிக்கும் களத்து மேடும்
நெல்லடித்த பின்பு உடலில் தோன்றி
குளித்தால் மறையும் அரிப்பும்...
பின் பனிக் காலத்தின்
சோம்பல் விடியல்களும்....
எழுந்து நடந்தால் என்
பாதம் பட்டு குளிர் உணர்த்தும்
பனித்துளிகளும்....

பனை மரத்து சலசலப்பும்...
பனம்பழத்தை சுடும்போது
வரும்...சுக மணமும்....
பத்தாம் பத்தாம் கோடு விளையாட்டும்..
மழை பெய்து நீர்நின்றால்
வயல் வெளியில் வரும்
'மடையான்'களைத் துரத்தும்
வில் அம்பு விளையாட்டும்

இன்னும் எத்தனையோ...
எத்தனையோ.....
இழந்து பிரிந்தது...
இதோ.. இந்த ஞாயிறின்
இளகிய பிடியில்...
என்னை அணைப்பது....
தனிமையும்....
நினைவுகளும் மட்டுமே....!

Tuesday, November 8, 2011

உலகத்தமிழருடன் உறவுப்பாலம்

உலகத் தமிழ் அன்பர்களே...


நான் என்னை முதலில் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். வேதாரண்யம் என்ற கடற்கரை ஊரில் பிறந்தவன். தற்போது சென்னை ஒரு அரசுடமையாக்கப் பட்ட வங்கியில் முது நிலை மேலாளராக பணி செய்து கொண்டிருக்கிறேன்.


ஆரம்ப கால கட்டங்களில் ௧௯௯0 களில் தமிழ் மோகம் கொண்டு அலைந்தவன், கால மாற்றங்களில் சிறிது நாள் தமிழை விட்டு விலகி இருக்க வேண்டியவனானேன். வெளி நாடு சென்று பொருள் தேடும் அன்பர்களின் நிலை போன்றதுதான் என்னுடையதும். அவர்கள் புலம் பெயர்ந்துள்ளனர் ; நான் இடம் பெயரவில்லை, சிறிது எழுத்தும் எண்ணமும் சிதறி இருந்தேன்.


மீண்டும் வந்திருக்கிறேன், தமிழ்க் குடில் என்ற தாய் வீடு தேடி.


மெய்யெழுத்து என்று இந்த விலைப் பூவிற்கு பெயர் வைத்தது கூட, உணர்வுகளை உண்மையிலிருந்து பிறழாமல் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஆசையில்தான்.


நான் இலக்கிய ஆர்வலனே ஆன போதும், முழு நேர இலக்கியவாதி அல்ல என்பதால், சில நேரங்களில் சில தவறுகள், வேகம் குறைவான வீச்சுகள் இருக்கலாம்; இருப்பின் முன்கூட்டியே பொது மன்னிப்புக்கு விண்ணப்பித்து விடுகிறேன்.


இந்த வலைப்பூ உங்களுக்கும் எனக்கும் உறவுப் பாலமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


என்றும் வளரும் அன்புடன்,

இராஜேஸ்வரன். ஆ