Sunday, November 13, 2011

ஒரு ஞாயிறின் தனிமையில்...

ஒரு ஞாயிறின் தனிமையில்...

ஞாயிற்றுக் கிழமைகள்
ஓய்வோடு சேர்த்து
சிந்திக்க நேரமும் தருகின்றன..

சிந்தனைக்கும் நிகழ்காலத்திற்கும்
நெடுங்காதம்....
சேர்வதே இல்லை....
சிந்தனைச் சிறகு
ஒன்று பழங்காலத்தை
தூசி தட்டி பாய் போல் விரிக்கிறது...
அல்லது கனவும் கற்பனையுமாய்
விரியும் எதிர்காலத்தை
குடையாய் பிடிக்கிறது...

இந்த ஞாயிறு எனக்களித்த
சிந்தனை....
இறந்த காலத்தின் வாழும் நினைவுகள்..
இப்படியோர் மாலை
இளவயதில் இருந்தால்
தனிமை உணர்வு
நெருங்கி வராது....
இள வெயிலும், இதமான காற்றும்
விளையாட சேர்ந்த
பொடியர்களின் கூட்டமும்...
இழந்து நிற்கும் இந்த கணம்..
தனிமை கூட்டுகிறது...
பொடியனாகவே இருந்திருக்கலாம்
என்ற ஏக்கம் வாட்டுகிறது...

கிராமத்தின் மணலும்..
கீற்றுக் கொட்டகைகளும்...
சாலைகள் இல்லா ஊரில்
சாலையாய் வளையும் கால்வாயும்...
அறுவடை முடிந்த பின்பு
கால் குத்தும் நெல் சட்டையும்
நெல்லடிக்கும் களத்து மேடும்
நெல்லடித்த பின்பு உடலில் தோன்றி
குளித்தால் மறையும் அரிப்பும்...
பின் பனிக் காலத்தின்
சோம்பல் விடியல்களும்....
எழுந்து நடந்தால் என்
பாதம் பட்டு குளிர் உணர்த்தும்
பனித்துளிகளும்....

பனை மரத்து சலசலப்பும்...
பனம்பழத்தை சுடும்போது
வரும்...சுக மணமும்....
பத்தாம் பத்தாம் கோடு விளையாட்டும்..
மழை பெய்து நீர்நின்றால்
வயல் வெளியில் வரும்
'மடையான்'களைத் துரத்தும்
வில் அம்பு விளையாட்டும்

இன்னும் எத்தனையோ...
எத்தனையோ.....
இழந்து பிரிந்தது...
இதோ.. இந்த ஞாயிறின்
இளகிய பிடியில்...
என்னை அணைப்பது....
தனிமையும்....
நினைவுகளும் மட்டுமே....!

2 comments:

  1. சிந்தனைக்கும் நிகழ்காலத்திற்கும்
    நெடுங்காதம்....
    சேர்வதே இல்லை....
    சிந்தனைச் சிறகு
    ஒன்று பழங்காலத்தை
    தூசி தட்டி பாய் போல் விரிக்கிறது...
    அல்லது கனவும் கற்பனையுமாய்
    விரியும் எதிர்காலத்தை
    குடையாய் பிடிக்கிறது...


    உண்மை தான் ... ரொம்ப நல்லா இருக்கு..
    தொடர்ந்து எழுதுங்கள்.
    ~சிநேகமாய் முருகன்

    ReplyDelete
  2. ராஜாளிக்காடு செல்லும் வேளையெல்லாம் கண்டிப்பாய் உன் நினைவு வருகிறது........

    ReplyDelete