Friday, July 15, 2022

கடிநாய் மேலாண்மை

என் மாமாக்களின் ஊர் வேளாங்கண்ணி அருகில் உள்ள பூவைத்தடி / பிரதாபராமபுரம்.  வடபுறத்தில் உள்ள என் தாத்தா வீட்டிலிருந்து அங்குள்ள மாரியம்மன் கோவில் திடலைத்தாண்டி என் நடு மாமா வீட்டிற்கு செல்வது வழக்கம். அந்தத்திடல் சுற்றியுள்ள வீடுகளில் வளர்க்கபடும் நாய்களின் புகலிடம்.  ஒரே நேரம் அங்கொன்று இங்கொன்றாக சுமார் 10 நாயகள் படுத்திருக்கும்.  கடக்கும்போது ஒரு நாய் குரைக்க ஆரம்பித்தால் மற்றவையும் சேர்ந்து கொள்ளும். கடித்தாலும் ஒன்று சேர்ந்து குதறி விடும். அந்த முதல் நாயை அடக்கி விட்டால் நிலைமையை கட்டுக்குள் கொணரலாம்.  ஒரு கல் எடுத்து உறுதியாக நின்று அடிப்பது போல் பாவனை செய்தாலே போதும், அவை ஓடி விடும்.  இந்த அனுபவம் என்னை இக்கவிதை எழுதத் தூண்டியது.  மேலும் எனக்கு திடீரென்று கோப வயப்படுகிறேன் என்ற ஓர் அவப்பெயர் உண்டு.  என் திடீர்க் கோபங்களுக்கு இந்தக் கவிதை பதில் தரும்.  இது ஆட்சி புரிவோருக்குமான அறிவுரைக் கவிதை. (குறிப்பு: கல் எடுக்கத்தான் சொல்லி இருக்கிறேன். எறிய அல்ல)

###############

கடிநாய் மேலாண்மை
*******************
நாய் உனைக் கடித்தால்
நீ அதைக் கடிக்க
நீயும் நாயும் ஒன்றல்ல..!

நித்தமும் கடிக்கிற
நாய்தனை விடுவது
நியாயத்தின் படியும் நன்றல்ல!

ஒரு நாய்தானே என மனம் கொண்டு ஒதுங்கியே சென்றால்  நிலை மாறும்

ஊரினில் உள்ள நாயெல்லாம் சேர்ந்து உன் கெண்டைத் தசைக்கு அடி போடும்...

முதலில் மன்னித்து பிழைத்திட வழி கொடு
முறைப்படி அதுவே அறமாகும்.

முரண்டுகள் தொடர்ந்தால் முடிவினில் கல்லெடு 
வெறித்திடும் நாய்கள் மிரண்டோடும் !!