Wednesday, April 3, 2013

ஆன்மிகம்


கீதாச்சாரம்:
******************

இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை எத்தனையோ அறிவுரைகள் கொண்ட நூல்.  எந்த ஒரு சமய நூலும், இறுதியில் சாரமாகத்தான் மக்களை அடைகிறது.  அது தரும் விரிவான விளக்கங்களையோ வியாக்யானங்களையோ முழுமையாக மக்கள் படித்து அத்தனையையுமே விளங்கிக்கொள்ள விரும்புவதில்லை என்பது ஒரு தவிர்க்க இயலாத உண்மை.  அதற்கு பகவத் கீதையும் விதி விலக்கல்ல. 

எனவே கீதையின் சாரத்தைப் பார்க்கலாம்.  கீதையில் ஒரு மனிதனின் உயிர் (ஆன்மா) ஒரு கூட்டை விட்டு இன்னொரு உடல் தேடிச் சேருமென்றும் உடல்தான் அழிவுறுவது, ஆன்மா அல்ல என்றும் கூறப்பட்டிருக்கிறது.  இது இந்நாள் வரை அப்படியே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டதாக தெரியவில்லை.  ஆனால் அதன் மூலம் கீதை உணர்த்த வந்த வழிமுறையை ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது.

எல்லா சமய நூல்களுமே (இது வரை அறிந்த) அறிவியலை அடிப்படையாகக் கொண்டு  உன் உடலோடு சேர்ந்து, உயிரும் அழிந்து விடும் எந்த விதமான தொடர்ச்சியும் இல்லவே இல்லை என்று ஆணித்தரமாக மக்களிடம் அறிவுறுத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள் - பிறகு பெரும்பாலான மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசமே இல்லாத வாழ்க்கை முறைதான் அமையும்.  அதாவது "வல்லவன் வாழ்தல்". வல்லமை இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - பிறர் நலன் தேவையேயில்லை என்ற நிலைமை உருவாகி இருக்கும்.  மனித நேயமே மறைந்து போயிருக்கும். அதுதான் எதுவாக இருந்தாலும், இந்த ஒரே பிறவியோடு முடிந்துவிடுமே ; பிறகு நல்லது செய்தால் என்ன? அல்லது செய்தால் என்ன? அதிக நாள் உயிரோடு இருந்தால் போதும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும்.

இந்த ஆன்மா தொடரும் என்ற கருத்தின் மூலம்,  இப்பிறவியில் நல்லது செய்,  மறு பிறவியும் அந்த புண்ணியம் உன்னைத் தொடர்ந்து வந்து நலன் பயக்கும் என்று ஒரு நம்பிக்கை திணிக்கப் பட்டு குறைந்தபட்சம், அச்சத்தின் பேரிலாவது மனிதம் காக்கப் படுகிறது.

மற்றொரு முக்கிய உபதேசம் - "கடமைச் செய் பலனை எதிர்பாராதே".  இது கூடுமான வரையில் தவறாகவே புரிந்து கொள்ளப் படுகிறது.  இது கடமையைச் செய்பவர்களுக்கு மட்டுமே.  அந்தக் கடமையால் பலன் அடைபவர்களுக்கு அல்ல. அதைப்போல கடமை என்பதன் பொருளும் மிக மிக விரிவான ஒன்றாகும்.  அது எல்லா செயலுக்குமே பொருந்தும். இதன் பொருள் எந்த பிரதிபலனும் எதிர் பார்க்க வேண்டவே வேண்டாம் என்பதல்ல.  அப்படி இருப்பின் அந்த கீதை போதித்த கிருஷ்ணா பரமாத்மாவே குருஷேத்ர யுத்தத்துக்கு துணை பொய் இருக்க வேண்டிய அவசியமில்லை.  கானக வாழ்வு முடிந்ததா? கடமை முடிந்தது துரியோதனனிடம் நாடு கேட்பதெல்லாம் வேண்டாம்.  பாண்டவர்கள் இருக்கின்றதை வைத்துக்கொண்டு வாழ்ந்து மடியட்டும் நெற்று விட்டிருப்பார். 

"பலனை எதிர்பாராதே" என்றால் உன்னுடைய பலனின் மீதான எதிர்பார்ப்பு உன் மற்ற கடமைகளையோ, உன் எதிர்காலத்தையோ , உன் நடைமுறை வாழ்வையோ பாதிக்காமல் இருப்பதாக என்று பொருள்.  இந்த முறை பதவி உயர்வுக்கு தேர்வு எழுதுகிறீர்கள், கிட்டவில்லை ; கடும் கோபத்தில், அடுத்ததை எழுதாமல் விடுகிறீர்கள், பிறகு கிடைத்ததை வேண்டாமென்று ஒதுக்குகிறீர்கள்,  இப்படியாக வெவ்வேறு வாய்ப்புகளை நழுவ விட்டு, வாழ்வின் தரமும் உயராது, உங்களை நீங்களே வருத்திக்கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள்.  யாருக்கு நட்டம்?    கூட்டி கழித்துப் பாருங்கள் உண்மையான நட்டம் அதாவது பெருத்த நட்டம் முதல் தோல்வியால் உருவானதா? இல்லை அதன் விளைவான உங்களின் "எதிர்வினையால்" உருவானது.    எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் இருந்தே தீரும்;  அளவுக்கதிகமான ஏமாற்றம் சுய அழற்சியில் உங்களை ஆழ்த்தி மேலும் மேலும் கீழே தள்ளும்.  எனவே "எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள்" என்பதுதான் பொருள்.

அடுத்தது -  எது உன்னுடையது இழப்பதற்கு ?   எழுதுகிறேன் பிறகு........Please excuse type errors.
Saturday, March 30, 2013

ஆன்மீகம்


ஆன்மீக நியதிகள் உருவான விதம்:

என்னுடைய சிறு அனுபவமும், விவாத அறிவும் சொல்லும் உண்மை - பெரும்பாலான ஆன்மீக நியதிகள் வளமான, வலிமையான வாழ்க்கை முறைக்காக உருவாக்கப் பட்டவையே.  நாளாவட்டத்தில் உண்மையான நியதி முறைகள் வெறும் வழி முறைகளின் (சாங்கியங்கள்) உருவமாக மாறி விட்டன என்பதே உண்மை.

சிறு உதாரணம் - சிறு நீர் கழிக்கும் ஒரு நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கலாம்.  என்னுடன் வேலை பார்த்த ஒரு மிக ஆச்சாரமான பிராமண குலம் என்று அழைக்கப்படும் குடும்பத்திலிருந்து (எனக்கு வர்ண பாகுபாடுகளில் நம்பிக்கை இல்லாததால்,  எந்த ஒரு வர்ண / சாதி பாகுபாட்டையும் - "என்றழைக்கப்படக்கூடிய- socalled " என்ற அடைமொழியோடு குறிப்பிடவே விரும்புகிறேன். இந்த அடைமொழி எங்காவது விடுபட்டுப் போனால் அது தவறி நடந்த ஒரு பிழையே.  எனவே எந்த ஒரு இனத்தின் குறியீடோ, சாதி வர்ண குறியீடோ இருப்பின் அதனுடன் socalled  சேர்த்து படிக்க வேண்டுகிறேன்).  ஒரு நண்பன் , தன்னுடைய பூணூலை சிறுநீர் கழிக்கும் இடத்தில் நுழைந்தவுடனே காதில் தூக்கி மாட்டிக் கொள்வான்.  பிறகு சிறுநீர் கழித்து முடித்து விட்டு கை கால் சுத்தம் செய்த பின் பழையபடி தோளில் படருமாறு விட்டு செல்வான்.  

அவனிடம் ஏன் அப்படி செய்கிறான் என்று கேட்டேன்.  "தெரியாது, என் முன்னோர்கள் இப்படி செய்யச் சொல்லி ஆசாரத்தை கடை பிடிக்க சொன்னார்கள், செய்கிறேன்".  யோசித்துப் பார்த்த பொது பூணூலின் அமைப்பும் நீளமும் பார்த்தால், சிறிது கவனம் தவறினால் சிரிநீறாலோ, சுத்தமற்ற கழிப்பிடத்தினாலோ மாசு படுவதற்கான வாய்ப்பு அதிகம். இடுப்பை விட சிறிது இறங்கியே அதன் நீளம் அமையும்.  எனவே, ஒவ்வொரு முறையும், அதன் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.  சுலப வழி என்ன?  பேசாமல் தூக்கி காதில் மாட்டி விடு.  குறைந்த பட்சம் 5 அங்குலம் இருக்கிற இடத்திலிருந்து உயரே ஏறிவிடும்,  பூணூல் மாசு படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைக்கப் படும்.

பெரும்பாலான கோட்பாடுகளை லட்சக் கணக்கான மக்களிடம் விளக்கி அவற்றை ஏற்றுக் கொள்ள செய்வது சிரமம் என்பதால் தொடங்கப்பட்ட வழிமுறைதான் சம்பிரதாயம் - மீறினால் சாமி கண்ணைக் குத்தும் என்ற மிரட்டல் .

தோப்புக் கரணம் போடுவதையும், நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்குவதையும் எடுத்துக் கொள்ளலாம். உடற் பயிற்சி எந்த அளவு முக்கியம் என்பதை விளக்க எந்த ஆன்மீகமும் தேவையில்லை,  சாதாரண வாழ்வியல் அறிவே போதும். இருந்தாலும்,  ஆன்மிகம் என்ற ஊடகத்தின் மூலம் அதை வெளிகொனரும்போது அதன் சென்றடைதல் (reach )  நன்றாக இருக்கின்றது.  தோப்புக்கரணம் என்பது "பஸ்கி" ;  நெடுஞ்சாண்கிடை நமஸ்காரம் என்பது "தண்டால்"  அவ்வளவுதான்.  கோவில் சென்றார்ப் போல் ஆயிற்று.  உடற்பயிற்சியும் முடிந்தது.  கோவில் வெளிப் பிரகாரத்தை வலம் வருதல் - நடை பயிற்சி. திருவண்ணாமலை சுற்றி வருதல் நெடும் நடை பயிற்சி. 

நான் வேதாரண்யம், திருவாரூர் போன்ற ஊர்களில் பெரிய கோவில்களுக்கு செல்லும்போது அங்கு நடக்கும் பூஜை செய்வதற்கு முன்பான சில தயாரிப்புகள் preparations பொறுமையை சோதிக்கும்.  முதலில் நீரை ஊற்றி கடவுள் சிலைய சுத்தம் செய்வர், பின் அலங்காரத்திற்காக திரையை மூடிவிட்டு 15 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வைப்பார்கள்.  காத்திருந்தால் - தீப ஆராதனை பார்க்கலாம்.  பொறுமையை கடைபிடிப்பதை விட மிகப் பெரிய மனப் பயிற்சி ஏதுமில்லை. தியானம் செய்யுங்கள், "குண்டலினி" சக்தியை நெற்றிக்கு கொண்டு வருவதாக ஏதாவது சொல்லுங்கள் ஆனால் இவை எதுவும் உங்கள் "பொறுமையை' அதிகப்படுத்தவில்லை என்றால், உங்கள் மனம் வலிமையற்றதே.

அவ்வாறு,பொறுமையை உங்களுக்கு சுற்றி வளைத்து வழங்குவது இந்த மாதிரி சம்பிரதாயம், அலங்காரம் யாவும். ஒரு பஸ்சுக்காக காத்திருக்கிறீர்கள் - நேரம் செல்ல செல்ல பொறுமை குறைகிறது; கோபம் அதிகரிக்கிறது; உங்கள் உட்சுரப்பிகள் (endocrine சிஸ்டம் - glands ) தாறுமாறாக வேலை செய்து, உங்கள் ஹார்மோன்கள் காரணமாக இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்கள் உண்டாகி நாளடைவில் நோய் உருவாக வழிவகுக்கின்றன. பொறுமை இருந்தால் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம்.  பஸ் நிறுத்தத்தை கோவிலாக ; பஸ்ஸை கடவுள் சிலையாக, காத்திருக்கும் நேரத்தை அலங்கார நேரமாக உங்களை பக்தனாக உருவகப் படுத்துங்கள் -  ஹார்மோன் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் -உடல் நலம், மன நலம் பாது காக்கப் படும். 


.... இன்னும் தொடருவோம்.....

(Please excuse typo errors)


Tuesday, March 26, 2013

ஆன்மீகம்ஆன்மீகம் - மூடமா?

இது பல ஆண்டு காலமாக நடந்து வரும் விவாதம்- கடவுள் உண்டா? இல்லையா? கடவுள் நம்பிக்கை மூட நம்பிக்கைதானா ?  ஆன்மீக உணர்வு நல்லதா,  தேவையற்றதா?   கடவுள் - ஆன்மீகத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் எப்போது விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  

ஒரு வேளை  அறிவியலின் மூலம் பிறந்த ஒருவனை என்றுமே அழியாமல் வைத்திருக்கும் நிலை எதிர் காலத்தில் வந்தால்... வரலாம் யார் கண்டது? செயற்கை முறையில் உயிரியல் தொழில் நுட்பம் மூலம் செயற்கை மூளையை உருவாக்கி செயற்கை உடலை உருவாக்கி இருக்கின்ற மனிதனின் தேவைப்பட்ட நினைவுகளை புதிய 'அவதாரத்துக்கு' மாற்றும் நிலை உருவாகுமானால் கடவுளுக்கான தேவை அற்றுப் போகலாம்.

அன்று வரை கடவுள் இருப்பார், ஆன்மிகம் இருக்கும்,  நம்பிக்கை இருக்கும்.

சரி ஆன்மீகத்தின் ஆதார பொருள் என்ன?   ஆன்மீகத்தில் நம்பிக்கையும், ஈர்ப்பும், ஆன்மிகம் தேவை என்ற உணர்வும் கொண்ட நானே சிறிது பட்டவர்த்தனமாக சொல்லவேண்டுமென்றால்  ஒரே ஒரு காரணம்.....

"எதிர் கால் விளைவுகளின் மீது நம்பிக்கையின்மை".

ஆம் - முரணானதுதான் ஆனால் உண்மை "நம்பிக்கையின்மை" தான் இந்த வகை நம்பிக்கைக்கே  ஆதார நாதம். எப்போது பொதுவான நம்பிக்கை குறைகிறதோ, அங்கு அந்த இழந்த நம்பிக்கையின் இடத்தை நிரப்ப இறை நம்பிக்கை வந்து நிற்கிறது.

பகுத்தறிவுவாதிகள் இதற்கு 'மூட நம்பிக்கை' என்றோ 'குருட்டு நம்பிக்கை' என்றோ பெயரிடலாம்.  ஆனால் நம்பிக்கை என்றாலே 'குருட்டுத் தனமானதுதான்'.  பழைய நிகழுவுகளின் அடிப்படையில் இவ்வாறு நடைபெறும் என்று 'நம்பி' இறங்கலாமே தவிர,  100% உறுதியாக இதுதான் நடக்கும் என்று கூற முடியாது.  கூறினால் அது ஆதார்மற்றதே.

சரி ஒரு தர்க்க வாதத்துக்காக ஒருவர் சொல்கிறார் "நான் அறிவியல் பூர்வமாக சொல்கிறேன்- 99% சதவீதம் இது இவாருதான் நடக்கும்".  உடனடியாக என் மனதில் இந்த கேள்விதான் எழும் -  சரி அந்த 99% சதவீதத்துக்கான வாய்ப்பு 1% ஆகவும்,  நடைபெறாமல் இருக்கக் கூடிய 1% சதவீததுக்கான வாய்ப்பு 99% ஆகிவிடாது என்று கூற முடியுமா?"  -   நிச்சயம் யாராலும் கூறவே முடியாது.

எனவே uncertainty  என்று சொல்லப் படக்கூடிய நிச்சயமற்ற தன்மையும், அதன் மூலம் நாம் பெரும் நம்பிக்கையின்மையும் இருக்கும் வரை கடவுள் நம்பிக்கை இருந்தே தீரும். 

ஆதாரமற்ற நம்பிக்கையை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் கொண்டிருக்கிறார்களே 'தன்னம்பிக்கை'  அது எந்த வகையில் உறுதியானது?  நீங்கள் உங்கள் வண்டியை எடுத்து ரோட்டில் ஓட்டும்போது வேண்டுமானால் உங்கள் தன்னம்பிக்கை உதவலாம்.  ஆனால் எதிராளி ஓட்டத் தெரிந்தவனா, ஓட்டத் தெரிந்தாலும் உங்களை இடிக்கி மாட்டானா? இடித்தாலும் அடிபடாதா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க உங்கள் 'தன்னம்பிக்கை' போதாது.  

எனவே வண்டி ஓட்டுவது உங்கள் தன்னம்பிக்கையில்; ஆனால் போக வேண்டிய இடத்திற்கு விபத்தில்லாமல் போய் சேருவீர்கள் என்ற நம்பிக்கை கொள்வது - "ஒரு வகை குருட்டு நம்பிக்கையே" - அந்த நம்பிக்கைக்கு ஆன்மீக வாதிகள் இட்டிருக்கும் பெயர் - "கடவுள் நம்பிக்கை" 


..... இன்னும் தொடருவோம்.....


(Please excuse typo errors)