(வேண்டுகோள்: சிறிது பெரிய கட்டுரை. பொறுமையுடன் படிக்கவும். பின்னூட்டங்களில் தனிமனித / குழுமத் தாக்குதல்களைத் தவிர்க்கவும்)
கடவுள் நம்பிக்கை vs மூடநம்பிக்கை:
மூடநம்பிக்கை என்ற சொல்லாடலுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் அடிக்கடி குழப்பம் ஏற்படுகிறது. கடவுளையும் யாரும் பார்த்ததில்லை, ஆனாலும் கடவுள் நம்பிக்கை மதிப்பிற்குரிய ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் மூடநம்பிக்கை கேலிக்குரிய ஒரு விஷயமாக ஆகிறது.
இந்த இரு நம்பிக்கைகளுக்குமே அடிப்படையான எந்த ஒரு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வ புள்ளி விபரம் இல்லை. ஆனால் இரண்டு நம்பிக்கைகளின் விளைவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கடவுள் நம்பிக்கை நன்மையைப் பயப்பதாகவும் மூடநம்பிக்கை தெரிந்தோ தெரியாமலோ ஒரு இடரில் கொண்டு முடியுமாறும் உள்ளன.
என்னுடைய மூத்த நண்பர் ஒருவர் ஒரு சம்பவத்தை எனக்கு எழுதியிருந்தார். சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலையிட்டு இருமுடி கட்டுவது வழக்கம். அந்த இருமுடியில் சில பூஜைப் பொருட்களும், தானியங்களும் இடம்பெறும். இந்த இருமுடி கலாச்சாரம் என்னுடைய கணிப்புப்படி ஆதிகாலத்தில் நடைபயணமாக சபரிமலை சென்ற பக்தர்களுக்குத் தேவையான உணவுக்கும், வழிபாட்டுப் பொருட்களுக்கும் உரிய ஒரு பொருள் முடிச்சாக இருந்திருக்கும். நாளாவட்டத்தில் பயன்பாடு குறைந்து சாங்கியம் அதிகரித்திருக்கும். நிற்க.
என்னுடைய அந்த நண்பர் சொன்ன இருமுடி கட்டுதலில் ஒரு ஊரில் இந்த சாங்கியம் இன்னும் ஒரு படி கூடுதலாகச் சென்று அங்குள்ள குருசாமி சாப்பிட்ட இலையை மீந்து போன பலகாரங்களோடு மடித்துத் தலையில் வைத்து கட்டிக்கொண்டு தூங்குவதை ஒரு வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள். இதை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது? இருமுடி கட்டுவது வரை நீங்கள் நம்பிக்கையில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மீதி உணவுப் பண்டங்களை சாப்பிட்ட இலையில் வைத்து மடித்துத் தலையில் கட்டுவதை மூடநம்பிக்கை என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏன் என்று சொல்கிறேன். அப்படி ஒருவர் தலையில் வைத்துக் கட்டி விட்டு இரவில் தூங்கும் போது எலி ஒன்று உணவுப் பொருளோடு சேர்ந்து தலையையும் கடித்துக் குதறி இருக்கிறது. அங்கு இருமுடி என்ற நம்பிக்கையால் பெரிய கேடு ஒன்றும் விளைந்து விடவில்லை; ஆனால் தலையில் கட்டப்பட்ட பல காரணத்தினால் வந்த எலிக் கடி இடரா? இடர் இல்லையா? எனவே அதை நான் மூடநம்பிக்கை என்றுதான் சொல்வேன்.
என்னிடம் மதிப்பிற்குரிய ஒரு நண்பர் "கடவுளை நம்புகின்ற நீங்கள் அது சார்ந்த மற்ற எல்லா நம்பிக்கைகளையும் நம்பித்தான் ஆக வேண்டும், இல்லை என்றால் கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கை என்று ஒப்புக் கொள்ளுங்கள்" என்று விவாதித்தார்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்குமே தெரியாது. யாருக்கும் தெரியவில்லை என்ற ஒரே காரணத்தினாலேயே கடவுள் இருக்கின்றார் என்ற முடிவுக்கும் வர முடியாது; கடவுள் இல்லை என்ற முடிவுக்கும் வர முடியாது. அது indeterminable. இந்த indeterminable விஷயங்களை நமக்குத் தெரியாது அல்லது நம்மால் உணர இயலாது என்ற காரணங்களுக்காக இல்லவே இல்லை என்று அறுதியிட்டுக் கூறுவதும் தவறுதான்.
15 ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் நம்பிக்கை என்றால் என்ன என்று சில வரிகள் எழுதினேன். அதில் நான் கொடுத்த உதாரணம்: வீட்டிலிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு நீங்கள் புறப்படும் போது உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் வண்டியை ஓட்டிக்கொண்டு செல்கிறீர்கள். அதற்கு தன்னம்பிக்கை என்று பெயர் சொல்லலாம். இந்தத் தன்னம்பிக்கை எல்லா நேரத்திலும் உங்களுக்குக் கை கொடுக்காது. வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை வெறும் தன்னம்பிக்கை அன்று. சாலையில் செல்லும் போது எதிரில் வருபவருக்கு வண்டி ஓட்ட தெரியுமா என்று உங்களுக்கு தெரியாது. அப்படி இருந்தாலும் எதிரில் உள்ளவர் உங்கள் மீது மோதுவாரா மாட்டாரா என்று தெரியாது . அப்படி மோதினாலும் விபத்தின் பாதிப்பு கடுமையாக இருக்குமா இருக்காதா என்று தெரியாது. ஆனாலும் ஒரு குருட்டு நம்பிக்கையில் வண்டியை எடுத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டு செல்கிறீர்கள். அந்தக் குருட்டு நம்பிக்கைக்கு ஆன்மீகவாதிகள் வைத்திருக்கும் பெயர் கடவுள் நம்பிக்கை. இதைத் தவிர அதற்கு பெரிய விளக்கம் ஏதும் தர இயலாது.
கண்ணதாசன் சொன்னது போல் உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை. இறை என்றால் அது இறை, சிலை என்றால் அது சிலை , அவ்வளவுதான்.
சரி நண்பர் விவாதித்தது போல் மூடநம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் ஏன் பிரிக்க வேண்டும்? என்ன நடக்கும் என்றே தெரியாத நிச்சயமின்மை -uncertainty நிறைந்த இந்த உலக வாழ்வில் நீங்கள் ஒரு கணத்திலிருந்து இன்னொரு கணத்திற்கு நகர வேண்டும் என்றால் ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. அந்த நம்பிக்கை நன்னம்பிக்கையாக இருக்கும்போது வாழ்க்கை சுழல்கிறது. அதே நம்பிக்கை உங்களை முடக்குகின்ற பட்சத்தில் வாழ்வு முடிவுக்கு வருகிறது. எனவே ஒரு நன்னம்பிக்கை தேவையாக இருக்கிறது. அந்த நன்னம்பிக்கையை உங்களுடைய வாழ்வின் அனுபவத்திலிருந்து, பழைய புள்ளி விவரங்களில் இருந்து நீங்கள் தருவிக்கும் போது அது அவநம்பிக்கையில் சென்று முடியலாம். ஆனாலும் அவநம்பிக்கையைத் துறந்து விட்டு நன்னம்பிக்கையை நீங்கள் கையில் எடுக்க வேண்டும். அப்போது அந்த நன்னம்பிக்கை எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கும்? குருட்டுத்தனமாகத்தான் நம்ப வேண்டும். அதை நீங்கள் கடவுள் நம்பிக்கை என்று அழைத்தால் என்ன குறைந்து விடப் போகிறீர்கள்?
இந்த நன்னம்பிக்கை இருப்பதால்தான் வாழ்க்கையின் அடுத்த கணத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள். இதே நன்னம்பிக்கையோடு சில தேவையில்லாத ஒட்டுதல்களை extra fittings நீங்களாகவே சேர்த்துக் கொண்டு, அது தேவையில்லாத பிரச்சனையில் உங்களைக் கொண்டு போய் விடும் என்றால் நீங்களே அந்த நன்னம்பிக்கையை மூடநம்பிக்கையாக உருமாற்றி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
பழனி முருகனுக்கு வேண்டுதல் செய்து கொண்டு வெளிநாட்டிற்குச் செல்ல முயற்சி செய்கிறீர்கள், முருகன் உங்களுக்கு நல்லது செய்வான் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு கணத்தையும் நகர்த்தி, தேவையான எல்லா நடவடிக்கைகளிலும் இறங்குகிறீர்கள். வெற்றி பெறுகிறீர்கள், வெளிநாடு செல்கிறீர்கள், சம்பாதிக்கிறீர்கள், வாழ்வு உயர்கிறது - இது கடவுள் நம்பிக்கை. ஆனால் அதே முருகனுக்கு விமானக்காவடி எடுக்கிறேன் என்று உடம்பு முழுக்க அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கி விழுந்து விமானப் பயணம் போவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சென்று படுத்து விடுகிறீர்கள். விசா கேன்சல் ஆகிவிடுகிறது. உங்களால் வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலை. முருகனிடம் வேண்டியது கடவுள் நம்பிக்கை. விமானத்தில் அலகிட்டு அந்தரத்தில் தொங்கியது மூடநம்பிக்கை. இதுதான் இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
மதிப்பிற்குரிய அந்த நண்பர் என்னிடம் விவாதித்ததன் காரணம் நான் சில பக்தர்கள் என்று கூறிக் கொள்ளக்கூடிய நபர்கள் ஒரு கோவிலில் எச்சில் இலை மேல் உருண்டதை "இவர்கள் பக்தர்கள் அல்ல முட்டாள் பதர்கள்" என்ற கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தேன். அது அந்த நண்பரை ஏதோ ஒரு விதத்தில் மனதளவில்
காயப்படுத்தி உள்ளது. நான் அந்த சொற்பிரயோகத்தை வேண்டுமென்றே கடுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பிரயோகித்தேன். அதே கோவிலில் இந்த பக்தர்கள் மொட்டை போடுவதையோ, காவி கட்டிக் கொள்வதையோ, ருத்ராட்ச மாலை போட்டுக் கொள்வதையோ, விபூதி பூசி கொள்வதையோ, திருநாமம் இட்டுக் கொள்வதையோ, சந்தனத்தைப் பூசிக்கொள்வதையோ நான் மூடநம்பிக்கை என்று விமர்சித்திருக்க மாட்டேன். அது ஏதோ ஒரு நம்பிக்கை, இருந்து விட்டுப் போகட்டும். இந்த நடவடிக்கைகளால் பெரும்பாலும் அந்த பக்தர்களுக்கு பெரிய கேடு ஒன்றும் வந்து விடப் போவதில்லை.
ஆனால் எச்சில் இலை மேல் உருள்வது , மண் சோறு சாப்பிடுவது இந்த மாதிரியான சுகாதாரமற்ற செயல்பாடுகளில் 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் உள்ள ஒரு நோயாளி பக்தன் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால் அவன் மருத்துவமனைக்குச் சென்று நோய் வாய் பட்டு இறப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் இருக்கிறதே தவிர அவனுடைய நோய் சரியாவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. எனவே தான் அந்தக் கடுமையான சொற்பிரயோகத்தை நான் பயன்படுத்தினேன்.
இதே போல் சில நாட்களுக்கு முன் பசுவின் சிறுநீரை ஹோமியம் என்ற பெயரில் உட்கொள்வதற்கு "இந்த ஹோமியம் எல்லா நோயையும் தீர்க்கும்-மனித முட்டாள்தனத்தைத் தவிர" என்று ஒரு கார்ட்டூன் வந்திருந்ததை நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து இருந்தேன். அதற்கும் ஒரு நண்பர் "ஏன் மற்றவர்களுடைய நம்பிக்கையைப் புண்படுத்துகிறீர்கள்?" என்று சொல்லி என்னிடம் கடுமை காட்டி இருந்தார்.
நம்பிக்கைகள் எல்லாவற்றையுமே அப்படியே நம்பிக்கை என்று விட்டுவிட முடியாது. அத்தகைய விடுபட்ட நம்பிக்கைகள் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதரைக் கடிக்கும்படியாக கடைசியில் நம்மையும் வந்து கடிக்கும். நாம் அறிந்தவரை அவை அறிவியல் பூர்வமாக இல்லை என்றால் சுட்டிக் கட்டுவது அவசியம். மாட்டின் சிறுநீரில் எவ்வளவு பாக்டீரியா உள்ளது என்பது மருத்துவத்துறையால் நிரூபிக்கப்பட்ட ஒன்று. நம்பிக்கை என்ற பெயரில் மாட்டுச் சிறுநீரை உட்கொள்வதும் மாட்டுச் சாணத்தை நாக்கில் தடவிக் கொள்வதும் சுகாதாரக் கேட்டில் முடியும். இதை மூடநம்பிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதைத்தான் நானும் சொன்னேன். அதைத்தான் அந்த கார்ட்டூனும் சொன்னது.
நான் கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய நாத்திகவாதி அல்ல. ஆனால் கடவுள் என்பவர் ஒரு தத்துவார்த்த ரீதியான ஒரு conceptual entity என்று நம்பக்கூடிய பகுத்தறிவுவாதி. பகுத்தறிவுவாதி என்றாலே "கடவுள் இல்லை என்று சொல்பவன்" என்ற ஒரு தவறான சிந்தனை அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக வலதுசாரி சிந்தனையாளர்கள் யாராவது ஒரு பகுத்தறிவுவாதியின் கருத்து கடவுள் நம்பிக்கை சார்ந்தவரை உற்சாகப்படுத்தும் விதத்திலோ, அவரை ஆதரிக்கும் விதத்தில் இருந்தாலோ "பார்த்தீர்களா பகுத்தறிவு பல்லிளிக்கிறது" என்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது பகுத்து அறிவது.
பெரியாரை பெரும்பாலானவர்கள் நாத்திகவாதி என்று சொல்வார்கள். நான் அவரைப் பகுத்தறிவுவாதி என்று தான் சொல்வேன். அவருக்கு அவர் இருந்த சூழ்நிலைக்கு பிள்ளையார் சிலையை உடைக்க வேண்டும் என்று தோன்றியது, உடைத்தார். அதற்கான விளைவுகளையும் அவர் சந்திக்கத் தயாராக இருந்தார். ஒவ்வொருவரையும் கூப்பிட்டு உன் வீட்டில் உள்ள பிள்ளையார் சிலையை தூக்கிப் போட்டு உடை என்று அவர் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. அவரைப் பின்தொடர்ந்தவர்கள் அதே மாதிரி சிலையை உடைத்து இருந்தார்கள் என்றால் அது அவர்களுடைய தீர்க்கமான முடிவு.
சொல்லும்போதே பெரியார் என்ன சொன்னார்? "நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் செய்யாதீர்கள்; உங்கள் அறிவு என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றார் போல் செயல்படுங்கள்" என்று கூறினார். அதனால்தான் பெரியாரை ஆதரிக்கும் பெரும்பாலானவர்கள் தம் வீட்டில் முருகன் படமும் வைத்திருப்பார்கள். பெரியார் வீட்டில் முருகன் படம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முருகனை நம்பி ஒரு நல்ல காரியம் நடக்கின்றது என்றால், பெரியாரின் பகுத்தறிவைப் பயன்படுத்தி அதே மாதிரி நல்ல காரியங்கள் அவர்கள் வீட்டிலேயே நடக்கும்.
முட்டாள் பதர்கள் என்ற சொற்றொடரை நான் தவிர்த்து இருக்கலாம். ஆனால் சில மருந்துகள் கசப்பாகத்தான் இருக்கும். கசப்பு மருந்துகள் தரப்பட்டுதுதான் ஆக வேண்டும். இந்த சொல்லாடலை பெரும் முன்னேற்றம் இல்லாத 17-18 ஆம் நூற்றாண்டில் நின்று கொண்டு நான் சொல்லவில்லை. கல்வியறிவு, தகவல் தொடர்பு எல்லாம் மிகவும் அதிக அளவில் முன்னேறி இருக்கும் 21 ஆம் நூற்றாண்டில்தான் இந்த சொற்பிரயோகத்தை நான் உபயோகிக்கிறேன்.
அடுத்த கேள்வி உங்களுக்கு எழலாம் "கொடுக்கின்ற கசப்பு மருந்து எல்லாம் நோயைத் தீர்த்து விடுகின்றனவா?" என்று. அதில் நிகழ்தகவு அதிகம் - அவ்வளவுதான். நூறு சதவீதம் இந்த நோய்க்கு இந்த மருந்து என்று தெரிந்து விட்டால் மனிதன் கடவுளாகி விடுவான். என் மனச்சாட்சி என்னை கசப்பு மருந்து தரச் சொல்கிறது. என்னால் கொடுக்க முடிந்த இடத்தில் கொடுக்க முடிகிற நோயாளிகளுக்கு நான் கொடுக்கிறேன். ஒரு மருத்துவர் தன்னைச் சுற்றி உள்ள சிறுவர்களுக்கு வலுக்கட்டாயம் செய்து இந்த மாதிரி கசப்பு மருந்தினை கொடுக்க இயலும். எதிரே உள்ள நோயாளி கத்தியும் கப்படாவுமாக நின்று கொண்டு இருந்தாலோ, "நீ இந்த மருந்து கொடுத்தால் உன்னை வெட்டிக் கொன்று விடுவேன்" என்றாலோ அந்த வைத்தியர் அவனிடம் அந்த மருந்தை கொடுக்காமல் போவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே இன்னாரிடம் இந்த வார்த்தையைப் பிரயோகம் செய்கிறாயே, அதோ அந்த நபரிடம் பிரயோகம் செய்வாயா? என்ற கேள்வி எல்லாம் என்னை கேட்காதீர்கள்.
இராஜேஸ்வரன் ஆ
20/05/2024