Sunday, December 11, 2011

பாரதி பிராமணனா?

முன் குறிப்பு : இது துக்ளக் சோ ராமசாமியின் "எங்கே பிராமணன்?" போல் வியாபாரத்திற்கான கட்டுரை அல்ல. (பின் குறிப்பும் இதுவே)

இன்று ஒரு நண்பர் தன்னுடைய முக நூலில் கவி மணி தேசிக விநாயகம் பிள்ளையையும், மகா கவி சுப்ரமணிய பாரதியையும் ஒப்பிட்டு, இருவரும் சம காலத்தவர்கள் என்றும் ஆனால் பாரதிக்கு மரியாதை அதிகம் எனவும் இதற்குக் காரணம் அவர் பிராமணர் என்பதாக இருக்குமோ என்று சந்தேகத்தையும் ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார்.

தற்போது பாரதிக்கு கிடைக்கும் மரியாதையில் ஒரு சிறு பகுதி அந்த காரணத்திற்காகவும் இருக்கலாம். ஆனால் கவிதையில் ஆங்கிலேயருக்கு சிதை மூட்டிய அந்த அக்னிக் குஞ்சை சாதீயம் என்ற மரப் பொந்தில் அடைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

சாதி மதங்களைப் பாரோம் என்று எழுதியவனையே ஏன் சாதீயக் கூட்டில் அடைக்க வேண்டும்? என் கருத்து பிராமணர் குலத்தில் பிறந்தது அவர் குற்றமில்லை. அவர் பிராமணராக வளரவும் இல்லை. அப்படி வளர்ந்திருந்தால் அந்த கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் இரண்டு இலக்கத்தில் மக்கள் நடந்திருக்க மாட்டார்கள்.

பிற்காலத்தில் அதாவது சுதந்திரத்திற்கு பின்பு அவரை சொந்தம் கொண்டாடுவடுவதற்கு ஆயிரம் பேர் தயாராக இருந்திருப்பார்கள். (அடித்து உதைக்கவோ, அடக்கு முறை செய்யவோ ஆங்கிலேயன் இல்லையே!!!). தான் வாழ்ந்த காலத்தில் செல்லம்மாளை ஒரு தாரமாகவும், வறுமையை மறுதாரமாகவும் மணந்தவன்; வெறும் பதினான்கு பேர் மட்டுமே தன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் அளவிற்கு "கொடுத்து" வைத்தவன் நிச்சயமாக எந்த ஒரு சாதியையும் சார்ந்தவனாக இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் வருடா வருடம் பாரதியை நினைத்துப்பார்க்கும் தமிழர்களில் சாதி உணர்வு மிகுந்த பிராமணர்களின் எண்ணிக்கை புள்ளி ஒரு சதவீதத்துக்கும் கீழாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

எனவே பாரதி பிராமணனா என்ற எண்ணத்தை தூக்கி எரிந்து விட்டு அந்த மகா கவியின் கருத்துக்களை ஆராய்வோம்- அது சுதந்திரத்திற்காக எழுதப் பட்ட வரிகளாக இருந்தாலும் சரி, புதுமைப் பெண்ணைப் பற்றியதாக இருந்தாலும் சரி, கண்ணனை நினைத்து கரைந்து உருகி எழுதிய ஆன்மீக வரிகளாக இருந்தாலும் சரி.

பாரதியின் எண்ணங்களோடு அன்பன்,

இராஜேஸ்வரன். ஆ

3 comments:

 1. பாரதி பிறந்த நாளில்
  நல்ல சிந்தனை...
  எந்த நிறமிருந்தாலும்
  அவை யாவும் ஓரே தரம் அன்றோ
  இந்த நிறம் சிறிதென்றும்
  இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

  வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
  அதில் மானுடர் வேற்றுமை இல்லை
  எண்ணங்கள் செய்கைகள் யாவும்
  இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

  என்ற பாரதியை எப்படி அவமதிக்கலாம் என்று

  சிந்திப்போர் ஏதோ தமது வரலாற்று அறிவும்

  ஆய்வுத் திறனும் வெளிப்படுவதாக நினைத்துத்

  தங்களையும் தாழ்த்திக் கொள்கின்றனர்.

  அக்காலத்திய சனாதன உலகம் எப்படி இருந்தது

  என்ற குறைந்தபட்ச விஷயம் அறிந்தவர்களால் தான்

  பாரதி எந்த உயரத்திற்குச் சென்றான் என்று உணர முடியும்..

  வாழ்த்துக்கள்  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 2. இனம் சுட்டும் இனங்களுக்கும்,அவன் பிறந்த இனத்திற்கும் நல்ல சவுக்கடி..

  ReplyDelete
 3. இன்றுதான் இதைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது
  தங்கள் கருத்து முற்றிலும் சரியே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete